search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளை அறிக்கை"

    முக்கொம்பு அணை உடைப்பு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார். #Thirumavalavan #MukkombuDam
    நெல்லை:

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டப் படிப்பில் பகுதி நேர ஆய்வாளராக சேர்ந்து ஆய்வுகளை செய்து வந்தார். நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் 1981 ஆம் ஆண்டு 180 குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக இஸ்லாம் மதத்தை தழுவினர். அது தொடர்பாக ஆய்வு நடத்தி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்தார். அதற்கான வாய்மொழித் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த வாய்மொழித் தேர்வை திருமாவளன் நிறைவு செய்ததையடுத்து அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

    முன்னதாக திருமாவளவன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய, மாநில அரசுகள் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. முக்கொம்பு அணை உடைபட்டது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழக அளவில் விடுதலை சிறுத்தை கட்சி வருகிற ஆகஸ்ட் 31‍-ந் தேதிவரை பனை விதைகள் விதைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் எங்கள் கட்சி சார்பில் கேரள மக்களுக்கு 10 லட்சம் நிதி, 15 லட்சத்தில் நிவாரண பொருட்களும் 2 நாட்களில் வழங்க இருக்கிறோம். கேரளாவிற்கு மத்திய அரசு வழங்கி உள்ள நிதி போதாது.

    கேரள முதல்வர் கேட்டுக் கொண்டபடி ரூ.3 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும். அரபு நாடு தொகையை வாங்க கூடாது என்பது தவறானது. மதவாத அடிப்படையில் அணுகாமல் மனிதநேய அடிப்படையில் மத்திய அரசு அணுக வேண்டும். அனைத்து கட்சி தலைவராலும் மதிக்க கூடிய முதுபெரும் தலைவர் கலைஞர். அவரது இறப்புக்கு பா.ஜ.க. தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அந்த அடிப்படையில் இரங்கல் கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். தி.மு.க. தரப்பில் அ.தி.மு.க.வை அழைக்கவில்லை. அழைத்திருந்தாலும் தவறில்லை.



    தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவ‌து வரவேற்கத்தக்கது பாராட்டுக்குரியது. தேர்தல் நெருங்குவதால் அரசியல் களம் சூடுபிடிக்கத்தான் செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan #MukkombuDam

    டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் விவரம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். #Mutharasan
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் காவிரி நீர் வராத கடைமடை பகுதிகளான பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி ஆகியவற்றை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்டா மாவட்டங்களில் 2016-17-ம் ஆண்டில் ரூ.100 கோடிக்கும், 2017-18-ம் ஆண்டில் ரூ.300 கோடிக்கும் குடிமராமத்து பணிகள் மேற்கொண்டதாகவும், இதன்மூலம் 3 ஆயிரத்து 854 குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

    இதேபோல் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் உலக வங்கியில் கடனுதவி ரூ.3 ஆயிரத்து 8 கோடி, பருவ நிலை மாற்ற திட்டத்தின் கீழ் ரூ.215 கோடி, அணைகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் 360 கோடி செலவில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அரச தெரிவித்துள்ளது.

    ஆனால் டெல்டா மாவட்டங்களில் எந்த ஆற்றிலும், வாய்க்கால்களிலும் தூர்வாரும் பணிகள் நடக்கவில்லை. அதனால் தான் கடைமடை வரை எந்த ஒரு வாய்க்காலிலும் தண்ணீர் வந்து சேரவில்லை.

    மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் தண்ணீர் வந்து சேராததால் 24-ந் தேதி (நாளை) பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு காத்திருப்பு பேராட்டமும், 28-ந் தேதி பேராவூரணியில் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டமும் நடத்தப்பட உள்ளது. தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளது. அந்த நிதி அனைத்தும் சூறையாடப்பட்டுள்ளது.

    இந்த முறைகேடுகள் குறித்து பொது விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழக அரசு இதுபற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    இனியாவது போர்க்கால அடிப்படையில் கரைகளை பலப்படுத்தி, தூர்வாரி டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை தண்ணீர் சென்றடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் முதல்- அமைச்சர், துணை முதல்- அமைச்சர், மற்றும் அமைச்சர்கள் பொறுப்பற்ற முறையில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று விட்டதாக பேசுவது கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார். #Mutharasan #DeltaDistrict
    அரிசி உற்பத்தி தொடர்பான உண்மையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு தரும் புள்ளி விவரங்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவைதானா என்ற பலத்த சந்தேகம் பல தரப்பினரிடமும் ஏற்பட்டிருக்கிறது. காரணம், அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு தந்துள்ள புள்ளி விவரத்திற்கும், இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்திற்கும் இடையிலான பெருமளவு வேறுபாடுகள் தான்.

    கடந்த 2013-2014 மற்றும் 2014-2015-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நெல் விளைச்சலில் ‘பம்பர் அறுவடை’ நடந்ததாக ஜெயலலிதா தலைமையில் இருந்த அ.தி.மு.க. அரசு ஊரெங்கும் தம்பட்டம் அடித்துக்கொண்டது. அதன் புள்ளி விவரப்படி, 2013-2014-ம் ஆண்டில் அரிசி உற்பத்தி 71.15 லட்சம் டன்களாகும். அதுபோல 2014-2015-ம் ஆண்டில் அரிசி உற்பத்தி 79.49 லட்சம் டன்கள் என தமிழக அரசு புள்ளிவிவரம் தந்துள்ளது.

    அதே நேரத்தில், இந்த 2 ஆண்டு காலத்திற்கான அரிசி உற்பத்தி குறித்து, இந்திய ரிசர்வ் வங்கி 2018-ம் ஆண்டு மே மாதம் வெளியிட்டுள்ள இந்திய மாநிலங்கள் குறித்த புள்ளி விவரங்கள் தொடர்பான கையேட்டில், 2013-2014-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தி 53.49 லட்சம் டன்கள்தான் என்றும், 2014-2015-ம் ஆண்டில் அரிசி உற்பத்தி 57.27 லட்சம் டன்கள்தான் என்றும் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் பார்க்கும்போது, 2013-2014-ம் ஆண்டின் அரிசி உற்பத்தியை ஏறத்தாழ 18 லட்சம் டன்களும், 2014-2015-ம் ஆண்டின் அரிசி உற்பத்தியை ஏறத்தாழ 22 லட்சம் டன்கள் அளவுக்கும் தமிழ்நாடு அரசின் புள்ளி விவரம் செயற்கையாக உயர்த்திக் காட்டியிருப்பது தெரியவருகிறது.

    மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறை தந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில், தனது கையேட்டில் தகவல்கள் பதிப்பிக்கப்பட்டிருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவிக்கின்ற நிலையில், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு தந்துள்ள புள்ளி விவரங்கள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறிக்குள்ளாகிறது.

    காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க ஆட்சியில் அதன் பிற்போக்குத்தனமான அணுகுமுறையினால், விவசாயிகளின் தற்கொலையும் பட்டினிச் சாவுகளும் அதிகரித்து வரும் நிலையில், அரிசி உற்பத்தியில் ‘பம்பர் சாதனை’ படைத்ததாகக் காட்டிக்கொண்டு, உண்மையை மறைக்க இப்படி இட்டுக்கட்டி பொய்யான புள்ளி விவரங்களை ஆட்சியாளர்கள் வழங்குகிறார்களோ என்ற ஐயமும் எழுகிறது.

    அ.தி.மு.க. ஆட்சியில் சட்டமன்றம் தொடங்கி மக்கள் மன்றங்கள் வரை சரியான புள்ளிவிவரங்கள் தரப்படுவதில்லை. சில தருணங்களில், நீதிமன்றத்திலேயே திசைதிருப்பக்கூடிய வகையில் தவறான புள்ளிவிவரங்களை அளித்து குட்டுப்பட்டதுடன், அதன் காரணமாக தமிழகத்தின் உரிமைகள் பறிபோனதும் உண்டு.

    முழுமையான விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் எனப் பலமுறை வலியுறுத்தியபோதும், எந்த ஒரு துறை சார்பாகவும் வெள்ளை அறிக்கை வெளியிட அ.தி.மு.க. அரசு தயாராக இல்லை. அதற்கு மாறாக, அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் தருகின்ற கருப்புப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் அரிசி உற்பத்தி போல, மூட்டை மூட்டையாகப் பொய் சொல்லும் வகையில்தான் அமைந்துள்ளனவோ? மக்களை ஏமாற்றுவதற்காகவே புள்ளி விவரங்களை ஆட்சியாளர்கள் வெளியிடுகிறார்களோ?.

    ஜனநாயக மாண்புகளைக் குழிதோண்டிப் புதைக்கும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், தங்களை ஆட்சியில் அமர்த்திய மக்களிடம் பொய்யையும், புரட்டையும், புளுகையும் காட்டி, இதுபோல தொடர்ந்து ஏமாற்ற நினைத்தால், அந்த மக்களே சரியான நேரத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள் என எச்சரிப்பதுடன், அரிசி உற்பத்தி தொடர்பான முழுமையான உண்மையான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட அரசு தயாராக இருப்பதாக சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். #minister #Vijayabaskar
    சென்னை:

    தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற மக்கள் நல்வாழ்வுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் இறுதியாக, தி.மு.க. உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் (பழனி தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

    ஐ.பி.செந்தில்குமார்:- மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் விபத்து சிகிச்சை பிரிவு உள்ளது. இதை தாலுகா அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் கொண்டுவர வேண்டும். தொலைநோக்கு திட்டம்-2023-ல் நீங்கள் என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்றால், உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் நகர்புறங்களில் 15 நிமிடத்திலும், புறநகர் பகுதிகளில் 30 நிமிடத்திலும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துவரப்படும் நிலை உருவாக்கப்படும் என்று சொல்லியிருக்கிறீர்கள்.

    அமைச்சர் விஜயபாஸ்கர்:- மெட்ரோ நகரமான சென்னையில் தற்போது 8.32 நிமிடம் என்ற அளவில் இந்த விகிதாச்சாரம் குறைந்துள்ளது. புறநகர் பகுதியிலும் கடந்த ஆண்டு 16 நிமிடங்கள் என்ற நிலை தற்போது 13 நிமிடங்களாக குறைந்துள்ளது.

    ஐ.பி.செந்தில்குமார்:- 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்ததே தலைவர் கருணாநிதி ஆட்சியில்தான்.

    அமைச்சர் விஜயபாஸ்கர்:- 108 ஆம்புலன்ஸ் திட்டம் முதல் சுகாதாரத் துறையில் சிறந்த திட்டங்கள் அனைத்தையும் கொண்டுவந்தது, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான்.

    ஐ.பி.செந்தில்குமார்:- ஆம்புலன்சில் பணிபுரியும் ஊழியர்களின் பணி நேரம் 12 மணியாக உள்ளது. அதை 8 மணி நேரமாக குறைத்து, 3 ஷிப்டுகள் முறையில் ஊழியர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு ஊதியத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வு நடக்கிறது. அந்த தேர்வு முடிவில் தமிழகத்தில் இருந்து எம்.பி.பி.எஸ். படிப்புக்கு தேர்வு பெற்றவர்கள் எத்தனை பேர்?, தேர்வுக்கு முன்பாக இருந்த நிலை என்ன?.

    அமைச்சர் விஜயபாஸ்கர்:- தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்கள் 4,500 உள்ளது. இதில், மத்திய அரசின் ஒதுக்கீடு 50 சதவீதம் போக, மீதமுள்ள 50 சதவீதமும் தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்குத்தான் வழங்கப்படுகிறது.

    ஐ.பி.செந்தில்குமார்:- ‘நீட்’ தேர்வை தமிழ் வழியாக எழுதிய மாணவர்களுக்கு 69 கேள்விகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. எப்படி அந்த மாணவர்களால் தேர்ச்சி பெற முடியும். மேலும், ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையை மட்டும் பார்க்காமல், தேர்ச்சி பெற்றவர்களில் எத்தனை பேருக்கு எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது என்று பார்க்க வேண்டும். இந்தியாவில் மொத்தம் மருத்துவ படிப்புக்கான இடங்கள் 63 ஆயிரம் உள்ளது. ஆனால், ‘நீட்’ தேர்வில் 7 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை, ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 80 சதவீதம் பேர் தனியார் பயிற்சி மையங்களில் படித்தவர்கள்.

    அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:- இந்த ஆண்டுதான் ‘நீட்’ தேர்வை சந்திக்கும் நிலை தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டது. அரசு சார்பில் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு 4 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. வேறு எந்த மாநிலத்திலும், ‘நீட்’ தேர்வுக்கு அரசே பயிற்சி அளித்திருக்கிறதா?.

    ஐ.பி.செந்தில்குமார்:- உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் வெளிப்படைத்தன்மை வேண்டும்.

    அமைச்சர் விஜயபாஸ்கர்:- தேவைப்பட்டால், இது தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவும் தயாராக உள்ளது. தேவையில்லாமல், உறுப்பு கொடையாளிகளின் குடும்பத்தினரையும், மருத்துவ நிபுணர்களையும் காயப்படுத்த வேண்டாம்.

    இவ்வாறு விவாதம் நடந்தது. #minister #Vijayabaskar
    ×